இந்த வார ராசிபலன்கள்  (9.8.2021 முதல் 15.8.2021 வரை)

இந்த வார ராசிபலன்கள்  (9.8.2021 முதல் 15.8.2021 வரை)

மேஷம் 
அஸ்வினி-1,2,3,4, பரணி-1,2,3,4, கார்த்திகை-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ச,சே,சோ,ல,செ,சை,லி,லு,லே,லோ,சொ,சௌ,அ,ஆ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
 வீரமும் விவேகமும் தைரியமும் முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உடல்நலத்தில் அவ்வப்போது சிறு உபாதைகள்  இருந்தாலும் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது பகை ஏற்படாமல் தடுக்கும்.கல்வியில் மேன்மை உண்டு. வருமானங்கள் அதிகரித்தும் போதுமான அளவு இல்லை என்ற வருத்தம் இருக்கும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்து தொடர்பு உடையவர்களுடன் பகைமையை பாராட்டாது  இருப்பது நன்மை தரும். வியாபாரம் சிறப்பான நல்ல பலனைக் கொடுக்கும்.கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படுவது மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். திருமணம் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. விரும்பியபடி வரன் அமைந்து வாழ்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். கலைத்துறையில் உள்ள நபர்களுடன் ஈடுபாட்டுடன் செயல்பட்டு   சாதனை படைக்கும் சூழ்நிலை உருவாகும். ஒரு சில சமயம் மனக்குழப்பம் ஏற்பட்டாலும், தைரியமாக செயல்படுவதன் காரணமாக நிவர்த்தி உண்டாகும்.தாய்மாமன் வகையறாக்களால்  எதிர்ப்பார்த்த உதவிகள் தாமதமாகும்.  இட மாற்றங்களுக்கான வாய்ப்புகள் உண்டாகும். எதையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி காணும் வாரமாகும்.

பரிகாரம் ,
முருகப்பெருமான் வழிபாடும் சிகப்பு நிற ஆடை தானம் கொடுப்பதும் வருமானத்தை அதிகப்படுத்தும் மேலும் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

ரிஷபம் 
கார்த்திகை-2,3,4,ரோகிணி-1,2,34,மிருகசீரிடம்-1,2 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் இ,உ,ஏ,ஈ,ஒ,வ,வி,அவாதி,வே,வோ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
 உழைப்பு தான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை புரிந்து கொண்டவர்களும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ ஆசைப்படுபவர்களுமான ரிஷப ராசி நேயர்களே! ஆரோக்கியம் செல்வாக்கு மேன்மை உண்டாகும். வருமானங்கள் அதிகரிக்கும்.கவலைகள் உங்களை விட்டு விலகும். பகைவர்கள் எத்தனையராக இருந்தாலும் அவர்களை அடக்கி ஆளும் வல்லமை ஏற்படும். தாயின் உடல்நலம் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.கணவன்,மனைவிக்குள் ஒற்றுமை  அதிகரிக்கும்.கௌரவ பதவிகள் தேடி வரும். கலைத் துறையில் உள்ளவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் மன மகிழ்ச்சியை கொடுக்கும். வழக்கு தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துகளில் மாற்றம் செய்யவும்,சொத்து விற்பனை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.  எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வண்டி வாகன வசதிகள் ஏற்படும். பயணங் களால் ஆதாயமும் நன்மையும் உண்டு. நிதி தட்டுப்பாடுகள் நிவர்த்தியாகும். கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். வியாபார முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழி பாட்டன் பாட்டி உடல் நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம் ,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வழிபாடு செய்து வெள்ளை மொச்சை தானம் கொடுப்பது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

மிதுனம் 
மிருகசீரிடம்-3,4, திருவாதிரை- 1,2,3,4, புனர்ப்பூசம்-1,2,3 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் கா,கி,கு,க,ஞ,ச,கே,கோ,ஹ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மிதுன ராசி அன்பர்களே! 
உலக நடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களும், சாதுர்யமாக  பேசக் கூடிய மிதுன ராசி நேயர்களே! உடல்நலம் ஆரோக்கியம் மேம்படும் கல்வியில் மந்த நிலை காணப்பட்டாலும் படிப்படியாக முன்னேற்றம் உண்டு. கவலைகள் காணாமல் போகும். வருமானங்கள் பல வழிகளில் வந்து சேரும்.  சலிப்பின்றி உழைக்கும் ஆற்றல் கிடைக்கும். கண் தொடர்பான சிறு  உபாதைகள் வந்து விலகும். சகோதர உதவிகள் மற்றும் ஒற்றுமை மேம்படும். தாயுடன் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். திறமைக்கேற்ற வகையில் முன்னேற்றம் உண்டு. வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை உண்டாகும். தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும்.கற்பனைவளம் அதிகரிக்கும்.  கலைத்துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும். பூர்வீகத்தை மாற்றியமைக்கவும் இடமாற்றம் செய்வதற்கான சூழலும் அமையும். பழைய சொத்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி எதிர்பார்த்த வகையில் வருமானத்தையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும். தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கும் முயற்சிகளுக்கு  உரிய நேரத்தில் கிடைப்பதனால் காரிய வெற்றி உண்டாகும்.

பரிகாரம் ,
 திருப்பதி வெங்கடாஜலபதியை மனதார பிரார்த்தனை  செய்து பச்சை பயறு தானம்  கொடுப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.

கடகம் 
புனர்ப்பூசம்-4,பூசம்-1,2,3,4, ஆயில்யம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஹ,ஹி,ஹீ,ஹே,க,கை,கொ,கௌ,டி,டு,டே,டோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே!
 பயணங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களும்,எந்நேரமும் ஏதேனும் ஒரு சிந்தனையில் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்க கூடியவர்களுமான கடக ராசி நேயர்களே!  பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வருமானங்கள் பல வழிகளில் வந்து சேரும். பூர்வீகச் சொத்தின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் இருப்பதால் செலவுகளை கையாளுவதில் கவனம் தேவை. கொடுக்கல்-வாங்கல் நன்றாக அமையும். குடும்ப ஒற்றுமை மேம்படும். சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சொத்து விற்பனை செய்யும் முயற்சி வெற்றி பெறும். வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கால்நடை பராமரிப்புகளில் கவனம் தேவை. கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் உண்டு. சொந்த தொழில் செய்வதற்கான முயற்சி வெற்றி பெறும். நெடுநாளைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரம் வளர்ச்சி, முன்னேற்றம், இலாபம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற  மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும்  எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர உறவுகளுடன் உண்டான பாகப்பிரிவினை சுமூகமாக தீர்க்கப்படும்.

பரிகாரம் ,
மாரியம்மன் வழிபாடு மற்றும் அரிசி தானம் செய்வதன் மூலம் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சிம்மம் 
மகம்-1,2,3,4,பூரம்-1,2,3,4, உத்திரம்-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ம,மி,மு,மை,மே,மோ,டி,டு,மா,மீ,மௌ,டே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான சிம்ம ராசி அன்பர்களே!
 அதிகார தோரணையும், ஆதரவு கொடுப்பதில் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் செயல்படும் சிம்ம ராசி நேயர்களே! பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு செல்வதற்கான முயற்சிகள் கைகூடிவரும். வருமானங்களுக்கு அதிகமான செலவுகள் உண்டாகும். செலவுகளை கையாளுவதில் கவனம் தேவை. குடும்ப உறவுகளுடன் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த தடைகள் தொடரும் ஆகையால் நிதானமாக செயல்படுவது நல்ல பலனைத் தரும். சகோதர வழி செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் வண்டி வாகனம் கால்நடை சேர்க்கை உண்டாகும். தொழிலில் கவனமாக செயல்படுவதன் மூலம் தேவையற்ற  விரயங்களை தவிர்க்கலாம். தொழிலில் இடமாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலர் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை மாற்றி அமைக்கும் சூழ்நிலை உருவாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதத்திற்குப் பின்னர் நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகளை திட்டமிட்டு செயல்படுவதன் மூலம்  வெற்றி கிடைக்கும். கல்வி தொடர்பான முயற்சிகள் தாமதப்பட்டு நிறைவேறும்.

பரிகாரம் ,
சர்வேஸ்வரனை வழிபாடு செய்து கோதுமை தானம் கொடுப்பதன் மூலம் வருமானங்கள் அதிகரிக்கும் மற்றும் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

கன்னி 
உத்திரம்-2,3,4,அஸ்தம்-1,2,3,4,சித்திரை-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் டோ,ப,பி,டோ,பீ,பூ,உருபூ,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
 நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லமை பெற்றவர்களும்,தன்னுடன் எப்போதும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர்களுமான கன்னி ராசி நேயர்களே! உடல் நலனில் அக்கறையும் கவனமும் தேவை. அனைத்து முயற்சிகளுக்கும் உடனடியாக பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபட  சிந்தித்து செயல்படுவது நன்மையை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை வெளி இடங்களுக்கான பயணங்கள் நன்மை தரும். சகோதர வழி உதவிகள் பயன்தராது. தைரியம்,துணிச்சல் குறையும். சொத்துக்கள் வழி கடன் மற்றும் வழக்கு பிரச்சினைகள் விரைவில் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து வழி ஆதாயம் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் முன்னேற்றம் சிறப்பாக அமையும். கடன்கள் கட்டி முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில்முறை பயணங்கள் பயனுள்ளதாக அமையும். தந்தையின் உடல்நலம் மற்றும் தந்தைவழி சொத்துக்களில் கவனம் மேற்கொள்வது நன்மையை உண்டாக்கும். உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். எதிர்பாராத திடீர் வரவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர உறவுகளால் ஏற்படும் தேவையற்ற விரயச் செலவுகளை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும்.

பரிகாரம் ,
சப்தகன்னியர் வழிபாடு மற்றும் புளி சாதம் ,தயிர் சாதம் தானம்  கொடுப்பது முன்னேற்றத்தை அதிகப்படுத்தும்.

துலாம் 
சித்திரை-3,4,சுவாதி-1,2,3,4,விசாகம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ர,ரி,பை,பௌ,ரு,ரே,ரோ,த,தா,தி,தே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! 
சிந்தித்து செயல்படுவதிலும், எல்லா விஷயங்களிலும் நியாயம், தர்மம் கடைபிடிக்கும்  துலாம் ராசிக்காரர்களே!  நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்கும் ஆற்றலும் துணிச்சலும் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அளவில் ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த பகை உணர்வு நீங்கும். உறவினர்கள் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைப்பட்ட கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டாகும். கலைத்துறையினர்களுக்கு சாதனை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர பொருட்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாரக் கடைசியில் செலவுகள் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு செல்வதற்கான சூழல் அமையும். இடமாற்றங்களும் தொழில் மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. தாயின் உடல்நலம் மற்றும் சொத்துக்களில் கவனம் செலுத்துவது நன்மை தரும். குழந்தைகளின் முன்னேற்றம், வளர்ச்சி  சந்தோஷத்தைக் கொடுக்கும்.கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். துணைவரின்  வேலைவாய்ப்பு முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும்.வண்டி, வாகனம் கால்நடைகளுக்கான பராமரிப்பு செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் ,
வரதராஜ பெருமாளை வழிபாடு செய்து பல வகையான இனிப்புகளை தானம் செய்வதனால் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் 
விசாகம்-4,அனுசம்-1,2,3,4,கேட்டை-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தோ,ந,நி,நா,நீ,நு,நே,நோ,ய,யு,நை ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான விருச்சிக ராசி அன்பர்களே!
அவசரத் தன்மையும் அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு  சரியான தீர்வுகள் கொடுக்கும் வல்லமையும் பெற்ற விருச்சிக ராசி நேயர்களே!  உடல்நலம், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புகழ், கௌரவம், அந்தஸ்து கூடும். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் அன்பும்,ஆதரவும், உதவிகளும் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில் அமையும் .சொந்த தொழில் செய்பவர்கள் கூடுதல் முதலீட்டுடன் விரிவாக்கம் செய்யலாம். திருமண வயதில் உள்ளவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி உள்ளவர்களின் ஆசைகள் பூர்த்தியாகும். சொத்து சேர்க்கை மற்றும் கால்நடைகள் சேர்க்கை உண்டாகும். பூர்வீகச்சொத்தினால் நன்மைகள் உண்டாகும். தைரியம் துணிச்சல் அதிகரிக்கும் தொழில் அபிவிருத்தி அடையும் .செலவுகள் கட்டுக்குள் வரும். வசூலாக வேண்டிய தொகைகள் வந்து சேரும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் மகிழ்ச்சியும் உண்டாகும். அலைச்சல் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும் .புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறனை மேம்படுத்தும். பயிற்சிகள் மூலம் பயனும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம் ,
குன்றின் மீது அமைந்துள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்து துவரம் பருப்பு தானம் செய்வது சிறப்பான நன்மைகளை கொடுக்கும்.

தனுசு 
மூலம்-1,2,3,4,பூராடம்-1,2,3,4,உத்திராடம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் யே,யோ,ப,பி,பு,பூ,த,ப,ட,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !
நிர்வாகத் திறமையும் ஆலோசனை வழங்குவதில் சாதுர்யமும் கலைகளை கற்று உணரும் வல்லமையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே !உடல்நலம், ஆரோக்கியம் ,முன்னேற்றம் வளர்ச்சி சிறப்பாக அமையும். வருமான தடைகள் படிப்படியாக விலகும் .தைரியம் துணிச்சல் அதிகரிக்கும் .சொத்துக்கள் தொடர்பான செலவுகள் பயனுள்ளதாக அமையும். வாகனங்கள் கால்நடைகள் போன்றவற்றிற்கான முதலீடுகளை தவிர்க்கவும் .கட்டிடம் தொடர்பான செலவுகள் நன்மையை கொடுக்கும். குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீகச் சொத்தின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கான கடன்கள் அதிகமாகும். தொழிலில் கவனமாக செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்கலாம். புதிய முதலீடுகள் எதிர்பார்த்த பலனை தராது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தந்தைவழி சொத்துகள் செலவுகள் அதிகரிக்கும் .சொத்து விற்பனை செய்யும் முயற்சி கைக்கூடி வரும் .குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்ற செயல்களால் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் மனநிறைவைத் தரும்.

பரிகாரம் ,
குரு பகவான் வழிபாடும் கொண்டகடலை பிரசாதமும் சங்கடங்களைத் தீர்த்து மன மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

மகரம் 
உத்திராடம்-1,2,3,4, அவிட்டம்-1,2,திருவோணம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஜ,ஜா,ஜி,ஜே,ஜோ,க,கா,கீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மகர ராசி அன்பர்களே!
 நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணமும், சலிப்பில்லாமல் கடுமையாக உழைக்கும் திறமையும் கொண்ட மகர ராசிக்காரர்களே! உடல்நலத்தில் கவனம் தேவை .எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மன நிலையில் ஒருவிதமான விரக்தி நிலை ஏற்பட்டு நிவர்த்தியாகும். வார தொடக்கத்தில் சந்திராஷ்டமம் இருப்பதால் அந்த நாட்களில் அமைதியாக இருப்பதும், புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும், யாரிடமும் வாக்குவாதத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதும் மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு ஏற்படும். தொழில் முயற்சிகள் தாமதமாகும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லையே என்ற வருத்தம் இருக்கும். புதன்கிழமையுடன் சந்திராஷ்டமம் முடிந்து விடும் .அதன் பின்னர் மாற்றங்கள் மன மகிழ்ச்சியை கொடுக்கும். தடைபட்ட காரியங்கள் நிவர்த்தி கிடைக்கும். தொழிலில் விரயங்கள் ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்துவது நன்மையாகும். அதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுடன் நட்பு பாராட்டுவது உயர்வை உண்டாக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் ஆன்மிக பயணங்கள் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பூர்வீக சொத்து மாற்றி அமைத்தல் தொடர்பான முயற்சி வெற்றி தரும்.

பரிகாரம் ,
சனிபகவானை வழிபாடு செய்து எள்ளுருண்டை தானம் செய்வதன் மூலம் தடைகள் விலகி காரியங்கள் நிறைவேறும்.

கும்பம் 
அவிட்டம்-3,4,சதயம்-1,2,3,4,பூரட்டாதி-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கு,கூ,ஞ,ஞா,கோ,கே,ஸ,ஸி,தோ,ந,தௌ,ஸே,ஸோ,த ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
பேச்சு திறமை மூலம் காரியங்களை சாதிக்கும் திறமையும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அரிச்சந்திரனாகவும் செயல்படும் கும்ப ராசி நேயர்களே! துணிச்சல் தைரியம் அதிகரிக்கும் உடல் நலம் ஆரோக்கியம் கௌரவம் அந்தஸ்து உயரும் .வருமானம் குறைவாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் வரும். சகோதர உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். சொத்து விற்பனை செய்யும் முயற்சி வெற்றி பெறும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் திருமண வயதினருக்கு தன் விருப்பப்படி வரன் அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் வாரநாட்களில் வியாழன் வெள்ளிக்கிழமைகள் தங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் அந்த நாட்களில் கவனமாக செயல்படுவது மிகுந்த நன்மையை தரும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை வேண்டும் வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும் தொழில் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்பு உருவாகும். இலாபம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம் ,
விநாயகர் வழிபாடும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்குவதன் மூலம் செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.

மீனம் 
பூரட்டாதி-4,உத்திரட்டாதி-1,2,3,4,ரேவதி-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தா,தீ,து,நோ,நௌ,ஞ,ஞா,தே,தோ,சா,சி,சீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மீன ராசி அன்பர்களே!
 பெருந்தன்மை போக்கும் தேடிச்சென்று உதவும் குணமும் கொண்ட மீனராசி நேயர்களே! பொதுவாக செயல்பாடுகளில் மந்தநிலை காணப்படும். வருமானப் பற்றாக்குறை அதிகமாகும். குடும்பத்துக்காகவும் அல்லது புதிய சொத்து வாங்குவதற்காகவும் கடன்கள் அதிகரிக்கும் தைரியம், துணிச்சல் குறையும்.ஒருவிதமான பயம் கலந்த உணர்வு ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் பொது வில்லங்கம் இல்லாமல் உள்ளதா என்பதை சரி பார்த்து வாங்குவது நன்மை உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை சற்று தள்ளிப் போடுவது சாதகமாக அமையும். குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் களத்திரத்துடன் அனுசரித்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.சேமிப்பு பாலிசியில் பணம் செலுத்துவது நன்மை தரும். தொழிலுக்கான கடன்கள் விரைவில் அடைபடும். தொழிலில் அதிகமான செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க கவனமாக செயல்பட்டு சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்தலாம். கல்வியில் வெற்றி கிடைக்கும் .மேல் படிப்புகளுக்கான முயற்சி நல்ல பலனை தரும். உணவு பொருட்களை பயன்படுத்தும்போது மேற்கொள்வதன்  மூலம் அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.
 பரிகாரம் 
 தட்சிணாமூர்த்தி வழிபாடும் மஞ்சள் நிற ஆடைகள் தானம் செய்வதன் மூலம் தொழில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
*வளம் தரும் வாஸ்து குறிப்புகள்

1. வீட்டின் அமைப்பு நீள்சதுர அமைப்புடன் இருப்பது மிகுந்த நன்மை உண்டாகும்.

 2.வடக்கும் கிழக்கும் பாதை உள்ள வடகிழக்கு மனையானது மாற்றுத்திறனாளிகளும், தத்து புத்திரம் உள்ளவர்களும் பெண் வாரிசு மட்டும் உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மையான பலன்களை கொடுக்கும்.

3. தெற்கும் கிழக்கும் பாதையிலுள்ள தென்கிழக்கு மனையானது டாக்டர், வக்கீல்,காவல் துறை, மருத்துவ துறை, நீதித் துறை இவற்றில் பணிபுரிபவர்களுக்கும் இரு தாரம் காதல் திருமணம், பெண் வாரிசுகள் அதிகம் உள்ளவர்களுக்கும் ஆகியோருக்கு முன்னேற்றமான பலன்களை கொடுக்கும்.

4. வீட்டின் வாசலுக்கு நேரே தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், பில்லர்கள், மரங்கள், தூண்கள் இல்லாமல் இருப்பது நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும்.

5.  வீட்டிற்கு அமைக்கும் தூண்கள் இரட்டை படையில் அமைக்க வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்கக்கூடாது. 

6.வாசல், ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று குத்தல் இல்லாமல் இருப்பது நலமாகும்.

7. வீட்டில் அமைக்கப்படும் லாப்ட், கப்போர்டுகள் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். இது போன்று சரியாக அமைக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். 

8. பூஜை அறை அமைக்கும் பொழுது கவனமாக அமைக்க வேண்டும்.படங்கள் கிழக்குநோக்கி இருப்பது மன அமைதியை ஏற்படுத்தும். வீட்டில் ஒன்பது அங்குல உயரத்திற்கு மேல் உள்ள சிலைகளை வைத்து வழிபடக்கூடாது.சிறிய கைப்பிடி அளவுள்ள சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும். 

9. பூஜை அறையில் இரண்டு விளக்குகளை வைத்து வழிபடவேண்டும். ஒன்று காமாட்சி விளக்கு மற்றொன்று மாக்கல்லில் உள்ள விளக்கு இருக்க வேண்டும். ஒன்று நல்லெண்ணையில் தீபமும் மற்றொன்று விளக்கெண்ணெயில் தீபமும் ஏற்றவேண்டும்.

10.  வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நறுமணம் கமல வேண்டும். துர்நாற்றம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் அவற்றிற்கு உரிய இடத்தில் இடம்பெற வேண்டும். 

11.உடைந்த பொருட்கள் கிழிந்த ஆடைகள் ஆகிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.