ஊராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு: நியாயம் கோரி முதல்வர் ஸ்டாலின் வீடு முன் வாலிபர் தீக்குளிப்பு!

ஊராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; நியாயம் கோரி முதல்வர் ஸ்டாலின் வீடு முன் வாலிபர் தீக்குளிப்பு!

சென்னை,செப் 27; ஊராட்சி மன்ற தேர்தலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தாகவும் அதற்கு நியாயம் வேண்டும் எனக்கோரி முதல்வர் ஸ்டாலின் வீடு முன் வாலிபர் ஒருவர் தீக்குளித்தார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில்  ஆழ்வார்பேட்டையில்  முதலமைச்சர் ஸ்டாலின் வீடு உள்ளது.இன்று காலை   ஒருவர் தனது உடலில்  திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீக்காயம் அடைந்த வாலிபரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிமாறன் (வயது43 )என தெரியவந்துள்ளது. இவர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரது வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டது. வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது அதற்கு தனக்கு நீதி வேண்டும் எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்று சந்திப்பதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.