கொடநாடு வழக்கு- சயான் வாக்குமூலம் நாளை மறுநாள் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் !

கொடநாடு வழக்கு- சயான் வாக்குமூலம் நாளை மறுநாள் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் !

கொடநாடு வழக்கு- சயான் வாக்குமூலம் நாளை மறுநாள் ஊட்டி கோர்ட்டில் தாக்கல்
சயான்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,ஆக 24; நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக போலீசார் கோர்ட்டின் அனுமதி பெற்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அவரை மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து சயான் கடந்த 17-ந் தேதி ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் 3 மணி நேரம் விசாரித்தனர்.அப்போது சயான், கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சயான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டவர். சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் விபத்து ஒன்றில் பலியானார். அதன்பிறகு கனகராஜின் அண்ணன் தனபால், தனது சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்தார்.

தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று ஊட்டிக்கு வந்த அவர் போலீசார் முன்பு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனது தம்பியின் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை. எனவே கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சயான் மற்றும் கனகராஜின் சகோதரரிடம் போலீசார் விசாரித்துள்ள நிலையில் இந்த வழக்கு நாளை மறுநாள் (27-ந் தேதி) நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது சயான், தனபால் அளித்த வாக்குமூலம் விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது. அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ஐகோர்ட்
இதற்கிடையே வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாகவும், எனவே போலீஸ் மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும். யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.இந்த தீர்ப்பு 27-ந் தேதி வரும் நிலையில், அதேநாளில் நீலகிரி கோர்ட்டில் சயானின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.