பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்து கழக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்!!

பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்து கழக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்!!

சென்னை,ஆக. 18: கோடநாடு கொலை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் பெயரை சேர்த்திருப்பதாக குற்றம்சாட்டி சட்டசபை நிகழ்ச்சியை புறக்கணித்து அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.அதன்பின் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க.,வினர் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. பிரச்சாரத்தில் பொய்யான தகவலை தெரிவித்து மக்களை நம்ப வைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் தி.மு.க. ஆட்சி நடத்துகிறது.

தங்கள் அதிகார பலத்தால் எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கும் தி.மு.க.,வினர் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து சட்டசபையில் எங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து பேச வாய்ப்புத்தரவில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டியும், வழக்குகள் போட்டும் அச்சுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.எங்கள் மீது போடப்படும் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். பொய்யான வழக்குகளை போடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தி.மு.க., அராஜக அரசைக்கண்டித்து இன்றும், நாளையும் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்ததாவது: முதல்வராக இருந்த போது ஜெயலலிதா அவ்வப்போது கோடநாடு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கு கொள்ளை முயற்சி நடக்கும் போது காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கு ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு முடியும் நிலையில் உள்ள போது, திட்டமிட்டு திமுக அரசு சயன் என்பவருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக செய்தி வந்துள்ளது. அதில் என்னையும் சிலரையும் சேர்த்திருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே புலன்விசாரணை செய்யப்பட்டு, வரும் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு வருகிறது. முடியும் தருவாயில் உள்ள வழக்கை, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை அச்சுறுத்தப்பார்க்கின்றனர்.

கோடநாடு குற்றவாளிகளுக்கு ஜாமின்தாரர்களாக இருந்தவர்கள் தி.மு.க.வினர். தி.மு.க. வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தான் குற்றவாளிகளுக்கு ஆஜரானார். ஊட்டி நீதிமன்றத்திலும் தி.மு.க. வழக்கறிஞர்கள் தான் ஆஜராகினர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட மூன்று நீதிபதிகள், மூன்று முறை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். தி.மு.க. தூண்டுதலில் டிராபிக் ராமசாமியின் வழக்கு உச்சநீதிமன்றம் சென்று, அங்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்கு பின் தி.மு.க. வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆஜரானவர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாக அவர்களுக்கு ஆதரவாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2020ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனுமதி பெற்று தான் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை மீறி தி.மு.க. செயல்படுகிறது. என் மீதும், அமைச்சர்கள் மீதும் பழி சுமத்த தி.மு.க இந்த ஏற்பாட்டை செய்கிறது. அ.தி.மு.க இதற்கு பயப்படாது.

தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதை திசை திருப்ப எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், அனைத்தையும் முறியடிப்போம். அ.தி.மு.க. தலைவர்கள் மீது பொய்வழக்கு போட்டு மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். எதற்கும் அஞ்சமாட்டோம். எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு எந்த நிலை ஏற்படும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.