கொடநாடு வழக்கில் எனது பெயரை சேர்க்க சதி: எடப்பாடி பழனிசாமி !

கொடநாடு வழக்கில் எனது பெயரை சேர்க்க சதி: எடப்பாடி பழனிசாமி !

சென்னை:ஆக,18 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கொடநாடு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி சயனிடம் காவல்துறையினர் நேற்று மறுவிசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் மறுவிசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர். குற்றவாளிகளுக்காக திமுக வழக்குரைஞரான என்.ஆர். இளங்கோ ஆஜரானார்.  உதகை நீதிமன்றத்திலும் குற்றவாளிகளுக்காக திமுக வழக்குரைஞர்களே ஆஜராகினர்.

பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது. இதனைக் கண்டித்து சட்டப்பேரவையை இன்னும் நாளையும் அதிமுக புறக்கணிக்கிறது.கொடநாடு வீட்டில் சயன் உள்ளிட்ட கூலிப்படையினர் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். கொள்ளை முயற்சியின்போது காவலாளி கொல்லப்பட்டார். கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த வழக்கில், கடந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்குரைஞர் தற்போது அரசு வழக்குரைஞராக மாறியுள்ளார்.கொடநாடு வழக்கு முடியும் தருவாயில், குற்றவாளி சயனிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றது, வழக்கில் எனது பெயரை சேர்க்க நடந்த சதி என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 
நீதிமன்ற விசாரணையின் போது சயன் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்?  கடைசி நேரத்தில் என்னையும் கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடக்கிறது. விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது அதனை மீண்டும் விசாரிப்பது திமுக அரசுதான் என்று கூறியுள்ளார்.முன்னதாக, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சயன் பரபரப்பு வாக்குமூலம்கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களில் ஒருவரான சயன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புதிதாக வாக்குமூலம் அளித்துள்ளாா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பல்வேறு முக்கியத் தகவல்களை சயன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில், ஓம் பகதூா் என்ற காவலாளியும் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக காவலர்கள் நடத்திய விசாரணையையடுத்து, சயன், வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, தீபு, ஜிதின் ஜாய், ஜம்ஷோ் அலி, உதயகுமாா், சந்தோஷ்சாமி, சதீஷன், பிஜின் குட்டி ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் இப்போது ஜாமீனில் உள்ளனா்.இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா்களில் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சயன் மேலும் பல முக்கியத் தகவல்களைத் தான் தெரிவிக்க உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாா்.அதேபோல, இவ்வழக்கில் கூடுதல் தகவல்களைப் பெற வேண்டி உள்ளதாக நீதிமன்றத்தில் காவல் துறையினரும் குறிப்பிட்டிருந்தனா். இதையடுத்து, சயனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த சென்னை உயா் நீதிமன்றம் உதகையிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத்திடம் சயன் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 மணி நேரம் புதிதாக மீண்டும் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளாா். அப்போது குன்னூா் துணை காவல் கண்காணிப்பாளா் சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோரும் உடனிருந்தனா். பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது.

செய்தியாளா்களிடம் சயன் பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல் துறையினரிடம் சயன் அளித்த புதிய வாக்குமூலத்தில் உள்ள தகவல்கள் குறித்து செய்தியாளா்களிடம் தானே தெரிவிப்பதாக காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், செய்தியாளா்களை சந்திக்கப் போவதில்லை என காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் கூறிவிட்டாா்.

இதற்கிடையே காவல் துறையினரிடம் சயன் அளித்த புதிய வாக்குமூலத்தில், சென்னையைச் சோ்ந்த மிக முக்கியப் புள்ளி (விவிஐபி) ஒருவரின் உத்தரவின்படி, கொடநாடு எஸ்டேட் பங்களாவில் மர வேலை பாா்த்திருந்த ஒருவரின் உதவியுடன் பங்களாவிலிருந்த முக்கிய ஆவணங்களைக் கடத்தி ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

அத்துடன், சில நாள்களில் கனகராஜ் சேலத்தில் காா் விபத்தில் மரணமடைந்துவிட்டதாலும், பங்களாவில் கணிப்பொறி உதவியாளராக இருந்த தினேஷ்குமாா் தற்கொலை செய்துகொண்டதாலும், தனது மனைவியும், குழந்தையும் காா் விபத்தில் கொல்லப்பட்டுவிட்டதால் தனது உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவியதாலும் இதுவரை முக்கியத் தகவல்களைத் தெரிவிக்காமல் இருந்ததாகக் கூறியதாகத் தெரிகிறது.

தற்போது தனக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் அந்த விவரங்களைக் கூற தயாராக உள்ளதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடா்பான அனைத்துத் தகவல்களும் கூடலூரைச் சோ்ந்த மர வியாபாரியின் தம்பிக்கும் தெரியும் என்பதால் அவரையும் வழக்கின் விசாரணையில் சோ்க்க வேண்டும் என கூறியிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.