தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் ரூபாய் 34 லட்சம் மோசடி! வணிக குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தேன்மொழி நடவடிக்கை !

தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் ரூபாய் 34 லட்சம் மோசடி! வணிக குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தேன்மொழி நடவடிக்கை !

காஞ்சிபுரம்,அக்1; காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்பேரமநல்லூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் வங்கி, சுமார் 20 ஆண்டுகளாக 3000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகை கொண்டு இந்த தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மூலம் விவசாய கடன், தங்க நகைக் கடன் ஆகியவை  வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நியாய விலை கடையும்  இந்தக்  வங்கியின் வளாக கட்டிடத்தில்  செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த  2017 / 2019 ம் ஆண்டில் காலூர் கிராமத்தை சேர்ந்த உமா அசோகன் என்பவர் தலைவராகவும் அதன்பின் அவரது கணவர் அசோகன் கூட்டுறவு வங்கி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். முன்பு இவர் அதிமுக கட்சியில் ஒன்றிய அளவில் பொறுப்பு வகித்தவர். 

இந்நிலையில், அசோகன் மற்றும் உமா தலைவராக இருந்தபோது பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகையில் போலி ஆவணங்கள் உருவாக்கி  மோசடியில் ஈடுபட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் உமாபதி  தணிக்கை துறையினருக்கு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். 

அதில், உமா மற்றும் அசோகன் தலைவராக இருந்த போது, வங்கி செயலாளர் திமுகவை சேர்ந்தவர் தேவநாதனுடன் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதும், இதேபோல் நியாயவிலைக் கடை ஊழியர் மணி என்பவர் துணையுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரம் முறைகேட்டில் ஈடுபட்டும் தணிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட பதிவாளர் காஞ்சிபுரம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில், வங்கி செயலாளர் தேவநாதன், தலைவர் காலூர் அசோகன், விச்சந்தாங்கல்  மணி மற்றும் முன்னாள் தலைவர் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உமா தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் தலைவர் உமா வெளியூர் சென்று இருப்பதால், அவரை கைது செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேர்ந்து  கீழ்பெரமநல்லூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூபாய் 34 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.